மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் போராட்டம்
டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் "நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை. மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார்.
பாஜகவை வெளியேற்றுவோம்
முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை. மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்.
கேரளாவிலிருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதலமைச்சரை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம்" என்று தெரிவித்தார்.