தளபதி முதல், முதல்வர் வரை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை
1953ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி கருணாநிதி , தயாளு அம்மாளின் மகனாகப் பிறந்த இவர், இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டவர். ஆம் முதலமைச்சர் ஸ்டாலினின் அரசியல் பயணம் 1967ஆம் ஆண்டு, பதினான்காவது வயதிலேயே தொடங்கி விட்டது.
ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைப் ஸ்டாலின் பெற்றிருக்கிறார் 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார், அவசரநிலை அமல்படுத்த போது 1975 சிறையில் அடைக்கப்பட்ட போலீசாரால் தாக்குதலுக்குள்ளான ஸ்டாலின் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக 1984ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
மாபெரும் அரசியல் தலைவரின் புதல்வரான ஸ்டாலின் முதல் தேர்தலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சந்தித்தபோது, அவருக்கு தோல்வியே கிடைத்தது. தனது முதல் தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் 1989 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின் .
அப்போதைய அதிமுக வேட்பாளராக களமிறங்கிய தம்பி துரையை எதிர்த்துப் போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக நுழைந்தார். 1996ஆம் ஆண்டு ஆயிரம்விளக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை ஸ்டாலினையே சாரும்.
2001 இல் மீண்டும் ஆயிரம்விளக்கு தொகுதியில் வென்று மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
2006இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் , முதல்முறையாக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2008ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், 2009இல் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொளத்தூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் கருணாநிதியின் மகன் என்ற பிம்பத்தை உடைக்க ஆரம்பித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் பாதிப்படைய தொடங்கியபோது 2017ஆம் ஆண்டு திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர் , 2021 ஆம் ஆண்டில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் அரியணையை அலங்கரிக்க தொடங்கிவிட்டார்.
கிட்டத்தட்ட 50ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி, முதல்வர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் இன்னும் பல சாதனைகள் புரிய ஐபிசி தமிழ்நாடு சார்பாக வாழ்த்துக்கள்