சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 06, 2022 03:49 AM GMT
Report

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

போதைப் பொருட்கள் ஒழிப்புக் கூட்டம் 

போதைப் பொருட்கள் ஒழிப்புக் குறித்து, மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்குபெறும் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து, தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து, உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

M K Stalin

சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று முதற்கண் கேட்டுக் கொள்கிறேன்.

போதைப் பாதை, அழிவுப் பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு, முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.

போதைப் பொருட்கள் அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது.

இது சமூகத்தின் - நாட்டின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும்.

அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. அதே நேரத்தில், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அரசின் மிக முக்கியக் கடமையாக நான் நினைக்கிறேன்.

போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

அன்றைய நாள், பள்ளி-கல்லூரிகளில் இதுதொடர்பான, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

அன்றைய நாள், தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது அரசியல் பிரச்சனை அல்ல நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சனை!குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்சனை. எனவே, நீங்கள் இதில், உங்கள் பங்களிப்பினை வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம்,

அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம்! இவ்வாறு, தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.