கீழடி அருங்காட்சிகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - போட்டோ எடுக்க குவிந்த பொதுமக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சிகத்தை திறந்து வைத்தார்.
கீழடி அருங்காட்சிகம் திறப்பு
மதுரையை மையமாக வைத்து நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து முடிந்த அரசு திட்டங்களை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை கீழடியில் சுமார் 18 கோடி ரூபாய் செலவில் வண்ண வண்ண ஒளி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சிகத்தை திறந்து வைத்தார்.
கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்குக் பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
இந்த கீழடி அருங்காட்சியகத்தில் பல்வேறு காட்சிக் கூடங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
போட்டோ எடுக்க குவிந்த பொதுமக்கள்
2 ஏக்கர் பரப்பில் ரூ.18.8 கோடி செலவில் தமிழ்நாடு மரபுசார் கட்டிடக்கலையின்படி கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் 6 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'மதுரையும் கீழடியும்' என்ற முதல் காட்சிக் கூடத்தில் பழங் காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள், மதுரையின் பழமை, கீழடி அகழாய்வு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் 15 நிமிட ஒலி ஒளிக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.