ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டி எழுப்பியவன் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெறும் - முதல்வர் பெருமிதம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஏறுதழுவுதல் அரங்கம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் ரூ.62 கோடி மதிப்பில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் "மதுரையை தூங்கா நகரம் என்பார்கள்; போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
முதல்வர் பெருமிதம்
சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த பெருமை.
ஏறுதழுவுவதற்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கும் பெருமை.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு திருவிழா உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றுதான் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கலைஞருக்கு ஏறுதழுவுதல் மீது தனி பாசம். அதனால்தான் முரசொலி சின்னமாக அதை வைத்தார்" என்றார்.