ஆறுகள் இணைப்புத் திட்டம்: விரைவான செயல்பாட்டுக்கு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டின் நீண்டகால குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருப்பதுடன், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு கடிதம்
நிலத்தடி நீர் வளங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் மிக முக்கியமான நீண்டகாலத் தீர்வாக அமையும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வெள்ள உபரிநீரை நீர் தட்டுப்பாடு பகுதிகளுக்குத் திருப்பிவிடவும் இத்திட்டம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் மேம்பாட்டு முகமை தற்போது தயாரித்துள்ள திட்ட அறிக்கையை மாற்றி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். என்றும், இதற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்து வழங்கி, விரைவுப் பாதை (Fast Track) முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தொடர்புடைய மாநிலங்களுடன் விரைவாக ஆலோசனைகளை முடித்து, விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவும், திட்டத்தை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த ஒன்றிய அரசு மற்றும்
பயன்பெறும் மாநிலங்கள் இணைந்து செயல்படும் சிறப்பு நோக்கு அமைப்பு (SPV) ஒன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், தென்னிந்தியாவின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து தேசிய நீர் வளங்களை சமநிலையுடன் பயன்படுத்தும் இலக்கை அடைய பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.