புதிதாக கட்டப்பட்ட தொழிற்பேட்டைகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக புதிய தொழிற்பேட்டைகளையும், ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
5 தொழிற்பேட்டைகளின் திறப்புவிழா
ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 5 தொழிற்பேட்டைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
இதனால் 7200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர். புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார், மற்றும் தண்டரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் ஒன்றையும் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், 1970-ஆம் ஆண்டு தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
இந்நிறுவனம் புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்திவருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட தொழிற்பேட்டை
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பீட்டில் 192 தொழில் மனைகளுடன் பகுதி-IIல் உருவாக்கப்பட்டுள்ள இத்தொதொழிற்பேட்டையினால் 2000 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
திருவண்ணாமலை மாவட்ட தொழிற்பேட்டை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 171 தொழில்மனைகள் கொண்ட இத்தொதொழிற்பேட்டையினால் 1800 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறுவர்.
சேலம் மாவட்ட தொழிற்பேட்டை
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.22 கோடி திட்ட மதிப்பீட்டில் 79 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தொதொழிற்பேட்டையினால் 1,000 நபர்கள் நேரடியாகவும், 2,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
நாமக்கல் மாவட்ட தொழிற்பேட்டை
நாமக்கல் மாவட்டம், ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 107 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தொதொழிற்பேட்டையினால் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
புதுக்கோட்டை மாவட்ட தொழிற்பேட்டை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 105 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தொதொழிற்பேட்டையினால் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
ஜவுளி பூங்காவில் பொது வசதி கட்டடம்
ரூ.2.22 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5700 சதுர அடி கட்டட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பொது வசதி கட்டடத்தையும் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக பொது வசதி கட்டடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @evvelu pic.twitter.com/vdfNgjG1SD
— TN DIPR (@TNDIPRNEWS) June 27, 2022