முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றிய மு.க.ஸ்டாலின்
75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முதன்முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார்.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்புகளை ஏற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க 8.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி ஜீப்பில் நின்று கொண்டு காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
வழக்கமாக கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நடத்தப்படும். ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அதே போல, பொதுமக்களும் நிகழ்ச்சியை காண நேரில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். அதன் படி, பொதுமக்களின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.