தமிழகத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பலி - 6 குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சின்ன மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு அழகுமுத்து என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, திரு.மதியழகன் என்பவரின் மகன் முருகன், திரு.சர்க்கரை என்பவரின் மனைவி ஜக்கம்மாள் மற்றும் கெப்பிலிங்கம்பட்டி திரு.செல்வகுமரேசன் என்பவரின் மகன் சூரியா ஆகிய நான்கு நபர்கள் மழையின் காரணமாக ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திரு.பிச்சமுத்து என்பவரின் மனைவி ஜெயக்கொடி, தென்கீரனூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம் பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு நபர்கள், இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரமான செய்திகளைக் கேட்டு மிகுந்த வேதனையுற்றேன்.ஆகவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மொத்தம் கடந்த 2 நாட்களில் மட்டும் மின்னல் தாக்கி 11 பேர் இறந்த நிலையில் 6 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.