"பருவநிலை மாற்றத்தை சிறந்த முறையில் எதிர்கொள்வோம்" - பிரதமர் மோடி பேச்சு
'பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, அமெரிக்கா சார்பில், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, நேற்று நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்தியா உட்பட, 40 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, வேகமாக, உறுதியாக, மிகப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
இந்தியா ஏற்கனவே, உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நானும், அமெரிக்க அதிபர் பைடனும் இணைந்து, இந்தியா - அமெரிக்கா பருவநிலை மாற்றம் மற்றும் துாய்மை எரிசக்தி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளோம். துாய்மையான எரிசக்தி, காடு வளர்ப்பு, உயிரி எரிபொருள் ஆகியவற்றை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை, இந்தியா எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற, ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், இந்தியா, தன் கடமையை சரியாக செய்து வருகிறது.இவ்வாறு பிரதமர் பேசினார்.