செம்மொழி சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செம்மொழி விருதை அதிமுக அரசு வழங்காததை நான் அரசியலாக்க விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும், விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டது.
அதில் பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.
விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தமிழ் வாழ்க, செம்மொழித் தமிழ் வாழ்க.. தமிழ் என்றாலே இனிமைதான்.
பண்பாட்டின் அடையாளமாக தமிழ் திகழ்கிறது. நிலம், மண், பன்பாடு, மக்களுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கிறது நம் தமிழ் மொழி. தமிழ் தொன்மையான மொழி என்பது தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. தமிழ் மொழி கிளைமொழி இல்லை.
தமிழ் மொழியிலிருந்து தான் பல மொழிகள் உருவாகி இருக்கிறது. பழமைக்குப் பழமையாய், புமைக்குப் புதுமையாய் இருக்கக்கூடிய மொழி நம் தமிழ் மொழி..
அரசியல் காரணங்களால் தமிழறிஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகள் கிடைக்காமல் இருந்தன; தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என்ற நூற்றாண்டு கனவை நிறைவேற்றியவர் கருணாநிதி.
செம்மொழி விருதை அதிமுக அரசு வழங்கவில்லை. செம்மொழி விருதை அதிமுக அரசு வழங்காததை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
தமிழுக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்தது திமுக ஆட்சிதான். பெரும்பாக்கத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படும்.
மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என்று அழைக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.