கொடைக்கானலில் கொடிக்கம்பம் அமைப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் - போலீசார் குவிப்பு
கொடைக்கானல் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்சிக்கொடிக்கம்பம் அமைப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பள்ளம் பகுதியில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் பேருந்து நிறுத்தம் அருகில் உரிய அனுமதி இல்லாமல் தங்களது கட்சிக்கொடிக்கம்பத்தை நிறுவியதாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் கட்சி கொடியை அகற்ற பல முறை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் எஸ்டிபிஐ கட்சியினர் அலட்சியமாக பேசியதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து அதேபகுதியில் உள்ள மசூதியின் அருகில் திமுக,அதிமுக,பிஜேபி,இந்து மக்கள் கட்சியினர் தங்களது கட்சி கொடி மரங்களை நிறுவியுள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் அனுமதி இல்லாமல் கட்சிக்கொடியை நிறுவியுள்ளதாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 கட்சிகளின் கொடி மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் , மேலும் உரிய அனுமதி இல்லாமால் கட்சிக்கொடிக்கம்பத்தை நிறுவிய எஸ்டிபிஐ கட்சியினர் உட்பட மற்ற 4 கட்சியினரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 30க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.