வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு
வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே மோதல் வெடித்துள்ளது.
மதிமுகவின் முதன்மைப் பொதுச்செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே சில மாதங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ அறிவித்தார். வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்த பிறகு, துரை வைகோ தனது முடிவை வாபஸ் பெற்றார்.
வைகோ குற்றச்சாட்டு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மதிமுகவில் பல காலம் எனக்குத் துணையாக மல்லை சத்யா இருந்தார். ஆனால், அண்மைக் காலங்களில் மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.
மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசினேன். கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் அவர் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்து விட்டார்.
கட்சியில் இருந்து யார் வெளியேற வேண்டுமென்றாலும், தாராளமாக வெளியேறி கொள்ளலாம். யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது" என பேசினார்.
மகனுக்காக துரோகி பட்டம்
இது குறித்து பேசிய மல்லை சத்யா, "குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன்.
ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்" என தெரிவித்துள்ளார்.