எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் வாக்குவாதம் - அதிமுகவினர் இடையே அடிதடி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில்லை அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி தரிசனம் செய்ய சென்ற இபிஎஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று வந்தார்.
அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அதிமுகவினர் இடையே மோதல்
முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சீனிராஜ் அவரது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி அவர் கொடுத்த விளம்பரங்களில் கடம்பூர் ராஜு புகைப்படம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சீனிராஜ்க்கும், கடம்பூர் ராஜு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல், தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியானது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மோதல் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி தரிசனம் செய்தார்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோயில் சிறப்பு அபிஷேகத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.