காவலர்கள் எளிதாக விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய செயலி ; முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை (CLAPP) முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன், காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி கவாலர்களின் உடல் நலனுக்காகவும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவல் முதல் தலைமைக்காவலர்கள் வரையிலான அனைத்துக் காவலர்களுக்கும்
வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கிகடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அரசாணையில், காவலர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் தொடர்ந்து பணிபுரிய நேர்ந்தால்,
அந்த ஒரு நாளுக்குரிய ஊதியம் தனியாக வழங்கப்படும் என்றும், அந்தக் காவல் நிலைய பணிச் சூழலைப் பொறுத்து காவலர்கள் வார விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து காவலர்கள் எளிதாக விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் வகையில் விடுப்பு செயலியை உருவாக்கும் பணியில் சென்னை மாநகர காவல் துறை ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை (CLAPP) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்பிறகு காவலர்கள் வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை கோரி இந்த செயலியின் மூலமே விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் விடுப்புக்கான அனுமதியையும் இந்த செயலியின் மூலம் வீட்டிலிருந்தே பெறலாம். இந்த செயலி மூலம் 2-ம் நிலை முதல் தலைமைக்காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.