CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம் - தலையில் குண்டு பாய்ந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடம்
புதுக்கோட்டை, நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில், இன்று வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி (11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளான்.
அப்போது, வீட்டில் பேரனும், தாத்தாவும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
2 குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. அதில் புகழேந்தியின் தலையில் குண்டு துழைத்தது. இந்த சம்பவத்தில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் புகழேந்தி சுருண்டு விழுந்தார்.
இவனது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓட வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிறுவனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காயம்பட்ட சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர்.
சிறுவனின் தலையில் இடது புறம் பாய்ந்த குண்டு, மூளையின் ஓரம் சிக்கி உள்ளதால், சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.