உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக மிகவும் பயந்தது – அமைச்சர் அன்பில் மகேஷ்!

politics
By Nandhini Sep 28, 2021 04:44 AM GMT
Report

கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்த பயந்து தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

அதே வேளையில், அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பக்கம், ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஒரு பக்கம் என அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த நரையூர் கிராமத்தில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தலின் போது கொடுத்த 500 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்ததோடு அந்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.

திமுக அரசாங்கம் அமைய காரணமாக இருந்த மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டிருக்கிறார். எனவே மக்களின் பிரச்சனையை அறியவே நேரில் வந்து கொண்டிருக்கிறோம். இனியும் வருவோம். கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கியமானது என்றார்.