இனி அப்படி செய்யாதீங்க.. மீறி செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!
நடிகர் விஜய்யை விட அவரது ரசிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். அவரை நிகழ்கால அண்ணா ‘துரை’ என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். விஜய்யோ படங்களில் அரசியல் பேசினாலும் முதலமைச்சராக நடிப்பதைத் தவிர்த்து வருகிறார்.
ஆனால், ரசிகர்கள் விடுவதாய் இல்லை. அவரை அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரைப் போல சித்தரித்து நாளைய விடிவெள்ளி போன்ற வாசகங்களுடன் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
தற்போது இதற்குக் கடிவாளம் போடும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து அறிக்கை வெளிவந்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
சமீப காலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள், இயக்கத்தினர் சிலரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
இருப்பினும், இயக்கத்தினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது. இதனை விஜய்யும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.