பெருக்கெடுத்து ஓடிய ஆறு - கரையோரம் நின்று செல்பி எடுத்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
சமீப காலமாக செல்பி என்ற மோகம் செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களை மற்றவர்களிடம் பெருமையாக காட்டிக் கொள்வதற்காக ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்.
மலையின் உச்சிப்பகுதி, நீர்வீழ்ச்சி, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றங்கரையோரம், ஓடும் ரயில் முன்பாக நின்று ஆபத்தான இடத்தில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்கிறார்கள்.
அப்போது கவனக்குறைவால் உயிரிழப்பு அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. அதேபோல்தான், செல்பி மோகம் இமாச்சல பிரதேசத்தில் இன்று 4 பேர் உயிரை பறித்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் 2 சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்திருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செல்பி மோகத்தால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.