மகந்த் நரேந்திர கிரி தற்கொலை - குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - உ.பி. முதல்வர் பேட்டி
அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகமடைந்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ளா பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் மகந்த் நரேந்திர கிரி, நேற்று மடத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக நரேந்திர கிரி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் சில சீடர்கள் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மடத்தின் சீடர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், துறவி மரணத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மகந்த் நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பாக பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஏடிஜி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயரதிகாரிகள் குழு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. பிரேத பரிசோதனை நாளை முடிவடைய உள்ளன. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.