நண்பனின் ஆத்மா சாந்தி அடைய அவரை கொன்ற அதே இடத்தில் காரணமானவரின் தலையை வெட்டி வீசிய இளைஞர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். எருமையூரைச் சேர்ந்த பிரபல ரவுடி மேத்யூவின் கூட்டாளியாக இருந்துள்ளார் வெற்றிவேல்.
வெற்றிவேலின் நண்பர்கள் மதன், சச்சின். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று தர்காஸ் கிறிஸ்தவ ஆலயம் அருகே அபிஷேக் என்கிற வாலிபரை வெற்றிவேலின் நண்பர்கள் சச்சின், மதன் இருவரும் வெட்டி படுகொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த படுகொலையை அவர்கள் செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் மதன், சச்சின் இருவரும் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அபிஷேக் படுகொலைக்கு சச்சின் , மதன் இருவருக்கும் வெற்றிவேல் தான் உடந்தையாக இருந்துள்ளார் என்று அவரை பழிக்குப் பழி தீர்க்க ஒரு கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.
அதன்படி கடந்த 14ம் தேதி அன்று நடுவீரப்பட்டு சித்தேரி அருகில் வெற்றிவேலை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. பின்னர் அவரின் தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு வந்து அபிஷேக் கொலை செய்த அதே கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பே வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
வெற்றிவேலின் தலை மற்றும் முண்டத்தை கைப்பற்றிய சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தார்கள். தனிப்படை தேடுதலிலில் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜி, ரிஷிகேஷ் ,லாரன்ஸ், மதிவாணன், முகமது அலி ஆகிய வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிவேல் படுகொலை செய்தது குறித்து கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், எங்கள் நண்பன் அபிஷேக் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் அவன் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் அபிஷேக்கின் கொலைக்கு உடந்தையாக இருந்த வெற்றிவேலின் தலையை வீசி உள்ளோம். சச்சின், மதன் இருவரும் எங்கள் கைகளில் சிக்கவில்லை. அவர்கள் சிக்கி இருந்தால் இன்னும் கொடூரமாக கொலை செய்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.