மண்ணிலிருந்து மறைந்தாலும் என் மனதிலிருந்து நீங்கள் மறையவில்லை மாமா - புகழ் உருக்கமான பதிவு!
சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு', 'கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்' உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.
'தலைநகரம்' வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு, இவர் செய்த காமெடி சின்னத்திரையில் மிகவும் பிரபலம். சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து, சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார். சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கூட பங்கேற்றார் வடிவேல் பாலாஜி.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் தனது இன்ஸ்டாவில் வடிவேல் பாலாஜி பற்றி உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். மிஸ் யூ மாமா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.