ஒலிம்பிக் வாள் சண்டையில் கலந்து கொண்ட முதல் இந்தியப் பெண்ணை நேரில் சந்தித்து சசிகுமார் பரிசளிப்பு
நடிகர் சசிகுமார் டோக்கியோ ஒலிம்பிக் வாள் சண்டையில் இந்தியா சார்பில் போட்டியிட்ட பவானி தேவியைச் சந்தித்து பேசினார். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வழக்கத்தை விட சிறப்பாக விளையாடியது. 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 48-ம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள் சண்டைக்கு தகுதிப் பெற்றார். ஒலிம்பிக் வாள்சண்டைக்கு தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றவர்.
ஆனால் பவானி தேவி 2வது சுற்றில் தோல்வியடைந்தார். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பெண்கள் பிரிவில் வாள்சண்டையை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. தற்போது, நடிகர் சசிகுமார் பவானி தேவியை நேரில் சந்தித்து அவருக்கு தங்க செயின் பரிசளித்திருக்கிறார்.
விடாமுயற்சியுடன் போராடு... அடுத்த முறை வெல்லலாம் என்ற நம்பிக்கை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம். தோற்றால் கண்டுகொள்ள மாட்டோம் என்ற நிலையில் சசிகுமார் பவானி தேவியை சந்தித்து நம்பிக்கை அளித்துள்ளது பலரது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.