ஒன்றரை ஆண்டாக சம்பளம் கொடுக்கவில்லை.. ரஜினிகாந்த் சார் தான் சம்பளம் தர வேண்டும் – ஆஷ்ரம் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் சென்னை வேளச்சேரியில் ஆஷ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் என்று 150க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரைக்கும் நிர்வாகம் தரவில்லை என்றும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, பள்ளியின் நிர்வாக செயல்பாட்டைக் கண்டித்து இன்று ஊழியர்கள் பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ஊழியர்கள் பேசுகையில், கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியம் வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிக்கிறது.
ஊதியம் ஏன் தரவில்லை என்று கேட்டால் தருகிறோம் என்று சொல்லி தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார்கள். நாங்கள் படும் சிரமத்தை நினைத்து பார்த்து ரஜினிகாந்த் சார் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்தாவது எங்களுக்கு ஊதியத்தை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.