போதைப்பொருள் விவகாரம் - ‘தமிழ் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ - பொங்கி எழுந்த சோனியா அகர்வால்!

cinema-viral-news
By Nandhini Aug 31, 2021 10:35 AM GMT
Report

தன்மீது அவதூறு பரப்பிய தமிழ் ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசாரும், போதை தடுப்புப் பிரிவு காவலர்களும் தீவிரமாக எடுத்து வருகின்றனர். பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இதில் சிக்கி வருகிறார்கள்.

தற்போது, போதைப்பொருள் விவகாரத்தில் மாடலும், நடிகையுமான சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் சேர்த்து டி.ஜே. வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைது விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர் ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘காதல் கொண்டேன்’ போன்ற படங்களில் நடித்த தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், தன் மீது அவதூறு பரப்பிய தமிழ் ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக சோனியா அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் தரும் அளவிற்கு அடுத்தடுத்து போன் அழைப்புகள், மெசேஜ்கள் வர காரணமான மீடியா, ஊடகவியலாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என பதிவிட்டுள்ளார்.