தஞ்சை பெரிய கோவில் பற்றி சர்ச்சை- நடிகை ஜோதிகா பேசிய பிறகு நடந்த அதிரடி மாற்றங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடித்தது குறித்து ஒரு விருது விழா மேடையில் பேசிய ஜோதிகா, படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே இருந்த ஓர் அரசு மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகக் கூறினார். அதை தஞ்சை பெரிய கோவிலோடு ஒப்பிட்டு பேசியது, பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்து அமைப்பினர் பலரும் ஜோதிகாவின் இந்தப் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு, அந்த மருத்துவமனையை சீரமைக்க நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இந்நிலையில், ஜோதிகாவின் பேச்சிற்குப் பிறகு அந்த மருத்துவமனையில் நடந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து ‘உடன்பிறப்பே’ பட இயக்குநர் இரா. சரவணன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தபோது அங்கே கர்ப்பிணிகளும், பிரசவமான தாய்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தார். முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது நடிகை ஜோதிகாவை ரொம்ப அதிர வைத்தது.
அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும்தான் அவங்க பேசினாங்க. பேச்சோட நிற்கலை. அந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்தாங்க. அவங்க பேச்சு பரபரப்பான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போது டீனாக இருந்த மருதுதுரை சார், மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தியபோது, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்" என பதிவிட்டுள்ளார்.
