"இதனால்தான் எம்.ஜி.ஆரை மக்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்" - மனம் திறந்து பேசிய நடிகை லதா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை லதா. 1973ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறைக்கு காலெடி எடுத்து வைத்தார்.
பிறகு, எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஏறக்குறைய 48 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ள லதா, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த நடிகை லதா கேள்வி ஒன்றுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது -
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். யாராவது சோகமாக இருந்தால், அழைத்து என்ன விஷயமென்று கேட்டறிவார். ஏதாவது பணப் பிரச்சனை என்று யாராவது கூறினால், ‘ஏன் என்னிடம் கேட்க மாட்டியா’ என்று கூறி உடனே பணம் கொடுத்து உதவி செய்வார்.
லைட்மேன் மாதிரியான பல தொழிலாளர்களுக்கு அவர் உதவி செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் மனிதநேயம். அனைவரிடமும் வாங்க.. போங்க என்று மரியாதையாக பேச வேண்டும் என்று எனக்கு அறிவுரை எல்லாம் கூறியிருக்கிறார். இதனால்தான் எம்.ஜி.ஆரை இன்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்றார்.
