இடிக்கு மேல் இடி... நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் - தொடர் நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவு

cinema-thanush-court-order
By Nandhini Oct 30, 2021 03:25 AM GMT
Report

புகை பிடிக்கும் காட்சி தொடர்பாக, நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு அனுப்பிய, 'நோட்டீஸ்' மீது தொடர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. தனுஷ் தயாரித்து, நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’.

இப்படத்தில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது -

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில், புகை பிடிக்கும் காட்சி இடம்பெறும் போது, எச்சரிக்கை வாசகம் உரிய வகையில் இடம் பெறவில்லை. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை சட்டத்தை மீறி, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, பொது சுகாதார துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். கடமை தவறிய, 'சென்சார் போர்டு'க்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மாநில சுகாதார துறை சார்பில், அரசு வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, ''சட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழு அதிகாரியான பொது சுகாதாரத் துறை இயக்குனர், விதிமீறல் தொடர்பாக நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் மற்றும் தியேட்டர் மேலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ''வழக்கு நிலுவையில் இருப்பதால், மேற்கொண்டு நடவடிக்கை தொடரவில்லை' என்றார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு -

மத்திய அரசு மற்றும் சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத் தயாரிப்பு நிறுவனம், தவறை ஏற்று மன்னிப்பு கடிதம் அளித்திருப்பதாகவும், சிகரெட் விளம்பர தடை சட்டத்தின் கீழ், தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியத்தை காப்பதற்கான, இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகையிலை சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது. இதனால், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். புகையிலை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைக்காக, உற்பத்தி திறன் இழப்பாக, ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகிறது. இந்தச் சூழ்நிலையில் தான், சட்டம் இயற்றப்பட்டது. இதை அமல்படுத்த தவறும் அதிகாரிகள், பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் குறுக்கிடுகின்றனர். மாநில அளவிலான கண்காணிப்புக் குழு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழுவுக்கு வரும் புகார்களை முறையாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பொது சுகாதாரத் துறை இயக்குனர், ஏற்கனவே அனுப்பிய நோட்டீசின் தொடர்ச்சியாக, சட்ட நடைமுறைகளை பின்பற்றி, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழுவில் காலியிடங்கள் உருவானால் தாமதமின்றி நிரப்ப வேண்டும். புகார்களின் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுப்பதை, பொது சுகாதாரத் துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இடிக்கு மேல் இடி... நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் - தொடர் நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவு | Cinema Thanush Court Order