“கண்ணான கண்ணே” பாடலுக்கு தேசிய விருது - மகிழ்ச்சியில் டி.இமான்
“கண்ணான கண்ணே” பாடலுக்கு தேசிய விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக டி இமான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது.
டி.இமான் இசையில் உருவான இப்படத்தின் அனைத்தும் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. கவிஞர் தாமரை வரிகளில் சித்ஸ்ரீராம் பாடிய இப்பாடல் அப்பா-மகள் பாசத்தை மையப்படுத்தி இருந்தது. இதனால் பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமான பாடலாக இப்பாடல் மாறியது.
இப்பாடல் யூடியூப்பில் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இப்பாடல் யூடியூப்பில் 15 கோடி பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடலுக்கு சிறந்த இசையை கொடுத்த டி இமானுக்கு மத்திய அரசு இன்று விருது வழங்க இருக்கிறது.
இந்த விருது நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றுள்ள டி இமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கண்ணான கண்ணே பாடலுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி; கமர்ஷியல் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்பணம் செய்கிறேன்” என்றார்.