நடிகர் சூர்யா இங்கு வந்தால் அவரை அடிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - இதைக் கண்டித்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

cinema-surya
By Nandhini Nov 15, 2021 04:23 AM GMT
Report

'WeStandWithSuriya' என்ற ஹேஷ்டேக் தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரை ஆக்கிமித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'ஜெய்பீம்'. இப்படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த படம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க, படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு சூர்யா பதிலும் அளித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறை தாக்கியதால் மறைந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக நடிகர் சூர்யா நேற்று தெரிவித்தார்.

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. பாமகவினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் போஸ்டரை மாற்றி ஒட்டிவிட்டனர். திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த ‘வேல்’ திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தெறிந்தனர்.

நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் விதமாக டுவிட்டரில், 'WeStandWithSuriya' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

நடிகர் சூர்யா இங்கு வந்தால் அவரை அடிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - இதைக் கண்டித்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் | Cinema Surya