எஸ்.பி.பி.யின் கடைசி பாடல் எனக்காக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை - ரஜினிகாந்த் உருக்கம்!

cinema-spb-rajini-song
By Nandhini Oct 05, 2021 05:48 AM GMT
Report

எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக எஸ்பிபியின் இந்த பாடல் இருக்கும் என கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினி உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி கிராம பின்னணியில் இப்படத்தில் நடிக்கிறார். வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி அண்ணாத்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் டி இமான் இசையில் உருவாகியுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலான இப்பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். எஸ்பிபியின் காந்த குரலில் இருக்கும் இந்த பாடல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.