ஷில்பா ஷெட்டி மீதான முத்த சர்ச்சை வழக்கு -14 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்தது
2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்ட போது, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே அவருக்கு பொதுமேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.
இந்த முத்தக்காட்சிகள் அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதனையடுத்து, பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது. அவர் மீது இந்திய சட்டப்பிரிவுகள் 292, 293 மற்றும் 294இன் கீழ் வழக்கும் போடப்பட்டது.
இவ்வழக்கை ஷில்பா மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அவர் தனது மனுவில் ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டபோது தான் தடுக்கவில்லை என்றுதான் தன்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், ஆனால் வழக்குத்தொடர பயன்படுத்திய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, புகாரில் கூறப்பட்ட குற்றங்களில் ஒன்றுகூட திருப்தி இல்லை என்று கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்றம், புகார் அளிக்கப்பட்ட பிரிவுகளின்கீழ் அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று கூறியதுடன் வழக்குகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனக்கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.