போதைப்பொருள் வழக்கு விவகாரம் - கைதான ஷாருக்கான் மகன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்!
போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதைப் பார்ட்டியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பின்பு ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்யப்பட்டனர். நேற்று அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 3 பேரையும் நாளை வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருக்கிறது.
இருந்தாலும், ஆரியன் கானின் காவலை நீட்டிக்க போவதில்லை என போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆர்யன் கான் போதைப்பொருளை வாங்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தனது மகன் கைதானதால் ஷாருக்கான் ஸ்பெயினில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.