ஆர்யன் கான் வழக்கு - குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - வெளியான ஐகோர்ட் உத்தரவு
விவரம் போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி ஜாமீன் அளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்.டபிள்யு சாம்ப்ரே, அக்., 28ல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு விபரம் நேற்று வெளியாகி இருக்கிறது. அதில், ஆர்யன் கான் செல்போனில் உள்ள 'வாட்ஸ் ஆப்' பதிவுகளில், அவர் நண்பர்களுடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அவர் சட்ட விரோத குற்றம் புரிந்ததற்கான சான்றுகளும் போதுமானதாக இல்லை.
ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் குற்றம் செய்யும் நோக்கம் கிடையாது என்பதால், அதற்கான வலுவான ஆதாரங்களையும் அரசு தரப்பில் அளிக்க முடியவில்லை. மேலும், ஆர்யன்கானிடம் போதைப் பொருள் இல்லை; அவரது நண்பர்களிடம் அதுவும் மிகச் சிறிய அளவே இருந்திருக்கிறது.
இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்று கூடி சட்ட விரோத செயல்புரிய திட்டமிட்டனரா என்பதையும், அதன் பின் போதுமான ஆதாரங்கள் உள்ளதா எனவும் நீதிமன்றம் முதலில் ஆய்வு செய்யும்.
இந்த அடிப்படை அம்சங்கள் இந்த வழக்கில் பலவீனமாக இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.