ஆர்யன் கான் வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட் - அடுத்து நடப்பது என்ன?
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவிடமிருந்து அந்த வழக்குப் பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பலை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு நடைபெற்ற சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (23) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஆர்யன் கான் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின்போது, ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் அளித்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ரூ. 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே பல வழக்குகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் தன் பங்குக்குக் குற்றம் சாட்டினார். தற்போது வான்கடே அதிரடியாக வழக்கு விசாரணையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், வழக்கு விசாரணை மும்பையிலிருந்து டெல்லி பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், டெல்லி பிரிவுக்கு உடன் இருந்து வான்கடே உதவி செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தான் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று வான்கடே விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும், இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.