ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிப்பு - 14 பிணை நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது
ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மீது 14 நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 20 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, கடந்த 8ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் 2 முறையும் அவர் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் பிறகு, தனக்கு ஜாமீன் வழங்க கோரி 3வது முறை மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் மனுத் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை ஐகோர்ட் ஆர்யன் கானுக்கு 28ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த ஜாமீன் மனு மீதான 14 நிபந்தனைகளையும் நேற்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
அதன் பிறகு, ஆர்யன் 1 லட்சம் மதிப்பிலான உத்தரவாதம் மற்றும் அதற்கு இணையாக 1 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெறலாம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. மேலும், வழக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது.
இதே போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மீடியாக்களில் அறிக்கை வெளியிடக் கூடாது. போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி அனுமதி கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது.
மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் கூட விசாரணை அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும், அதற்கான காரணத்தையும் அறிவிக்க வேண்டும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பகல் 11 முதல் 2 மணி வரை ஆஜராக வேண்டும்.
நீதிமன்ற விசாரணையின்போது, ஒவ்வொரு நாளும் கட்டாயம் ஆஜராக வேண்டும். எப்போதெல்லாம் விசாரணை நடக்கிறதோ, அப்போதெல்லாம் ஆஜராக வேண்டும். விசாரணையை தொடங்கிய பிறகு அதனை தாமதம் செய்யக்கூடாது.
நீதிமன்றத்தில் நடவடிக்கைக்கு பாதகமான செயல்களில் ஈடுபடக் கூடாது. மேலும், இந்த விதிமுறைகளில் ஏதாவது 3 விதிகள் மீறினால், ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு நீதிமன்ற அதிகாரிகள் நாடலாம் என்று நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.