ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் கைதான முன்முன் தமேச்சா, அர்பாஸ் சேத் - வெளிவந்த பின்புல தகவல்!
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் இருவர் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்யன் கான், ரேவ் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றார்.
இந்த பார்ட்டி, போதை பொருளை பயன்படுத்தி இரவு முழுக்க நடனம் ஆடும் பார்ட்டியாகும். இந்தப் பார்ட்டியின்போது நடனம் ஆடும் பெண்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். இந்த பார்ட்டி மும்பை சொகுசு கப்பலில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சென்று போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஆர்யன் கானைச் சேர்த்து, மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒரு பெண்தான் முன்முன் தமேச்சா. இவர் ஒரு ஃபேஷன் மாடல்.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பிசினஸ் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். முன்முன் தமேச்சா, 2019-இல் வடக்கு டெல்லி வளாகத்தில் உள்ள சர்வதேச ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (ஐஐஎஃப்டி) மையத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டிருக்கிறார். பாலிவுட் சினிமாவில் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் முன்முன், அடிக்கடி பார்ட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும்போது போதைப்பொருள் வைத்திருக்க தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்யும்போது, அவரிடமிருந்து 5 கிராம் மதிப்புள்ள சரஸ் என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சரஸ் என்பது கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருளாகும். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட 8 பேரில் மற்றொரு முக்கியமான நபர் அர்பாஸ் சேத் மெர்ச்சன்ட். இவர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கானின் நெருங்கிய நண்பர். பாலிவுட்டில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ளார்.
ஆர்யன் கான் போன்று பூஜா பேடியின் மகள் அலயா, நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் என நட்சத்திர தம்பதிகளின் பிள்ளைகள் பலரிடம் நட்பாக இருந்திருக்கிறார்.
அவர்கள் பலருடன் பார்ட்டிகளில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவர் பார்ட்டியின்போது 6 கிராம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் வரும் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டிருக்கிறது.