நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட 6 பேரின் ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணை

cinema-sharukhan-son-drug
By Nandhini Oct 08, 2021 04:39 AM GMT
Report

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட 6 பேரின் ஜாமீன் மனு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருட்களை பயன்படுத்தி சிறப்பு பார்ட்டி நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அந்தக் கப்பலில் சோதனை நடத்தினார்கள்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், எம்.டி.எம்.ஏ, ஹஷிஷ், உள்ளிட்ட சில போதைப் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், என்.சி.பி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தப் பார்ட்டியில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ஆர்யன்கானை போலீசார் கைது செய்தனர். பிறகு ஆர்யன்கானை 3 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்யன்கானுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பின்னர், அவரை போலீசார் மீண்டும் காவலில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. 

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட 6 பேரின் ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணை | Cinema Sharukhan Son Drug