‘உன்ன கோர்ட் விட்டாலும்... நாங்க விடமாட்டோம்...’ - மீரா மிதுனை விடாது துரத்தும் சிறுத்தைகள்!
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். நாள்தோறும் சர்ச்சையின் நாயகியாக மீரா மிதுன் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்தார்.
திரை நட்சத்திரங்களான நடிகர் விஜய், சூர்யா ஆகியோரை மிகவும் தரக்குறைவாகப் பேசி வம்பில் சிக்கினார் மீரா மிதுன். இதனை கோலிவுட் தரப்பிலிருந்து இயக்குநர் இமையம் பாரதிராஜா வன்மையாகக் கண்டித்தார். விஜய், சூர்யா ரசிகர்களும் மீரா மிதுனை வெளுத்து வாங்கினர்.
சினிமா பிரபலங்கள் யாரையாவது வம்புக்கு இழுத்து வந்த மீரா மிதுன் இந்த முறை வசமாக சிக்கிக்கொண்டார். காரணம் சாதி குறித்து இழிவாகப் பேசியதுதான்.
தமிழ் சினிமாவிலிருக்கும் தலித் இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரையும் கொச்சையாகப் பேசி வீடியோவை வெளியிட்டார் மீரா மிதுன். இது குறித்து, விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அவரை கேரளாவில் மீராவை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஷியாமையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டும் மீரா மிதுனின் ஆட்டம் அடங்கியபாடில்லை. கைது செய்யும்போதும், சரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும் சரி அழுது ஆரவாரம் செய்தார்.
இதற்கிடையில், நான் வாய் தவறி பேசிவிட்டேன் என்று கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். அவர் நண்பர் ஷியாமும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.