"எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லாவிட்டால் தமிழகத்தில் நடமாட முடியாது" - சூர்யாவுக்கு மிரட்டல்
நடிகர் சூர்யா படத்தை ஓடினால் தியேட்டர்களை நாங்கள் தீயிட்டு கொளுத்துவோம் என்றும், அவர் வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் நடமாடவே முடியாது என்றும் காடுவெட்டி குரு மருமகன் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஜெய் பீம்’. இப்படம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைவரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பும், பாராட்டு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி இருப்பதாக காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மனோஜ் பேட்டியில் கூறியிருப்பதாவது -
‘ஜெய் பீம்’ படத்தில் இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து காட்டியுள்ளனர் என்பதால் அது மக்களுக்கு தேவையான திரைப்படம் தான். ஆனால், உண்மை கதை என்று சொல்லிவிட்டு வில்லனை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராக காட்டி இருக்கிறார்கள். ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி.
ஆனால், அந்த கதாப்பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது, மேலும் சில காட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
அதே போல், வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டிற்குள் வன்னியர் சங்க காலெண்டரை தொங்கவிட்டிருக்கிறது. அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குரு என பெயர் வைத்ததற்கு பதிலாக, தீரன் சின்னமலை என்ன பெயர் வைப்பாரா சூர்யா?
இதற்காக நடிகர் சூர்யா ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சூர்யாவின் எந்த படமும் இனி தியேட்டர்களில் ஓடாது. ஓடவும் விடமாட்டோம். மீறி திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம்.
இவ்வாறு அவர் எச்சரித்து பேசியுள்ளார்.