பார்வதி அம்மா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த லாரன்ஸ் - ரூ.1 லட்சம் வழங்கினார்
மறைந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவை ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து அவருக்கு வீடு கட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஜெய்பீம்’. இப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மட்டுமல்லாமல், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், பல அரசியல் தலைவர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
அதன்படி இப்படத்தில் சுட்டி காண்பிக்கப்பட்டுள்ள ராசாக்கண்ணு என்பவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்தார். இந்த வழக்குக்கு 13 ஆண்டுகளுக்கு பின்பு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக அவரது மனைவி பார்வதி அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, தான் மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார்.
ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பார்வதி அம்மாள் நேரில் சென்று சந்தித்தார் ராகவா லாரன்ஸ். அப்போது, அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்பு, அவருக்கு வீடு கட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை லாரன்ஸ் வழங்கினார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் கூறுகையில், பார்வதி அம்மாவுக்கு அரியலூரில் உள்ள இடத்தில் வீடு கட்டிதர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் பூமி பூஜை நடக்கும். அப்போது நேரில் வருவேன் என்று பார்வதி அம்மாவிடம் வாக்குறுதி அளித்துள்ளேன். அதோடு, போலீசாரின் தாக்குதலில் மனம்நலம் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாவின் மூத்த மகனின் மனைவி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கும் ரூ.2 லட்சம் கொடுக்க உள்ளேன் என்றார்.