ப்ளீஸ்... யாராவது காப்பாற்றுங்கள்... ‘கண்டா வரச்சொல்லுங்க’ மாரியம்மாள் கண்ணீர்!
நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள், தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் பாடியது மூலம் பிரபலமடைந்தார். இப்பாடல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
சிவகங்கை மாவட்டம், கிடாக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கோயில் திருவிழாக்கள், சடங்குகள், இறப்பு வீடுகள் என எல்லா இடங்களிலும் இவர் பாடல்கள் பாடி வந்தார். ஏராளமான நாட்டுப்புறப்பாடல் ஆல்பங்களை வெளியிட்டுள்ள கிடாக்குழி மாரியம்மாள் வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
ஆனாலும் கர்ணன் படம் மூலம்தான் இவரை அனைவரும் அடையாளம் கண்டனர். மாரியம்மாள் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் மகளின் கணவர் சில வருடங்களிலேயே உயிரிழந்துவிட்டார்.
இவரது மகள் லட்சுமியும் நாட்டுப்புற பாடகர்தான். ஆந்தைக்குடி இளையராஜாவுடன் அத்தமக ஒன்ன நெனச்சு.. உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மகள் லட்சுமிக்கும், பேரன்களுக்கும் மாரியம்மாளே ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில், பேரனுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் புற்று நோய் இருப்பது தெரியவந்தது.
பேரனின் சிகிச்சைக்காக சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கி, பேரனுக்கு சிகிச்சை பார்த்து வருகிறார். கொரோனா காரணமாக வாய்ப்புகள் எதுவும் வராததால், நிதி நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அல்லாடிக்கொண்டு இருப்பதாக மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேரனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்து வருகிறார் மாரியம்மாள். யாராவது உதவி செய்து என் பேரனை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் என்று கண்ணீர் மல்க அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
