'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டேன்... நான் நலமுடன் இருக்கிறேன்’ - நடிகர் ரஜினிகாந்த்

cinema-rajinikanth
By Nandhini Nov 01, 2021 03:31 AM GMT
Report

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டிருக்கிறார்.

தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்துக்கு கழுத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போயஸ் கார்டன் வீடு வந்த அவருக்கு, குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், நான் நலமுடன் உள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆடியோ பதிவு வெளியிட்டிருக்கிறார். தனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கு, தனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என்று அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.