நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று கடலில் கரைக்கப்படும்: நடிகர் மயில்சாமி தகவல்
மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று கடலில் கரைக்கப்படும் என நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் 16ம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.
இவரின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் இல்லத்தில் செய்தியாளரிடம் நடிகர் மயில்சாமி பேசுகையில், நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று கடலில் கரைக்கப்படும். கட்சித்தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது வீடு வீடாய் சென்று வாக்குகளை சேகரிப்பார்கள்.
அது போல், மரம் நட கோரி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளோம். நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து மரங்களை நட திட்டமிட உள்ளோம். நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று வாங்கப்பட்டு கடற்கரையில் கொண்டு சென்று கடலில் கரைக்கப்படும் என்றார்.
நடிகர் தாமு கூறுகையில், விவேக் எங்களுடன்தான் இருக்கிறார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று பேசினார்.