கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்

1 week ago

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தன் ஆடை நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கு சென்றிருந்தார். அந்த விழாவை முடித்து விட்டு இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதிப்பு உறுதியானது.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கை சமீபத்தில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே கொரோனா பாசிடிவ் உறுதியாகியுள்ளது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகையும், மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த மற்றும் பிரார்த்தித்த அனைவர்க்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்