நியூயார்க் 'டைம்ஸ்' சதுக்கத்தில் தோன்றிய இளையராஜா - ரசிகர்கள் உற்சாகம்
நியூயார்க்கின், 'டைம்ஸ்' சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி., திரையில், இளையராஜாவின் விளம்பரம் திரையிடப்பட்டது.
'இசை ஞானி' என்று அன்போடு மக்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக முழுதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில், 'ஸ்பாட்டிபை' என்ற செயலியில் இளையராஜாவின் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான விளம்பரத்தில் இளையராஜா தோன்றுகிறார்.
அதில், ஸ்பாட்டிபை செயலியில் தன் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்து, அதை அவர் விளம்பரம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்பாட்டிபையுடன் இணைந்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி., விளம்பர திரையில், இவரை குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.
அப்போது, இளையராஜாவின் புகைப்படத்திற்கு மேல், 'இசையின் ராஜா இங்கே இருக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இளையராஜா பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.