‛கதை கேட்டா நானும் தூங்கிருவேன்..’ விழா மேடையில் அஸ்வினை கிண்டலடித்த பிரபல நடிகர்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் அஸ்வின். இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.
இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது, நடிகர் அஸ்வின் பேசுகையில், “நான் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். 40 கதைகளை கேட்டுத் தூங்கியிருக்கிறேன். ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதையைத்தான் நான் தூங்காமல் கேட்டேன்.” என்றார். இவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடும் சர்ச்சையாகி விட்டது.
இதனையடுத்து இந்த சர்ச்சைப் பேச்சுக்கு அஸ்வின் விளக்கம் கொடுத்தார். ‘நான் அந்த மேடையில் மிகவும் பதற்றமாக இருந்தேன். என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. எதையும் தயார் செய்து கொண்டு போகவும் இல்லை. எந்த இயக்குநரையும் அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் பேசியது இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை’ என்றார்.
தற்போது ஒரு பிரபல நடிகர் விழா மேடையில் அஸ்வினை மறைமுகமாக கிண்டல் செய்திருக்கிறார்.
‘கடைசி காதல் கதை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அதில் பேசிய நடிகர் சாம்ஸ், “இயக்குநர் என்னிடம் இந்தப் படத்தில் உங்களுக்கு 2 நாள் தான் படப்பிடிப்பு என்றார். உடனே 2 நாள் தானா.. என்றேன். உடனே அவர் ஆனால் நிறைவாக இருக்கும் என்றார். உடனே கதை சொல்லட்டுமா என்று கேட்டார். “கதைக் கேட்டால் நான் தூங்கி விடுவேனே” என்றேன் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர். மேலும் பேசிய சாம்ஸ், “இயக்குநர் கதையை 2 நிமிஷம் தான் சொன்னார். என்னால் தூங்க முடியவில்லை. சில சமயங்களில் மனோபாலா என்னிடம் பேசுவார். அப்படி ஒரு முறை பேசும் என்ன பண்ணுகிறாய் என்று கேட்டார்.
அப்போது இல்லை சார் ஒரு ரோல் அதில் நடிக்க வேண்டுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். உடனே அவர் ஏன்டா கதை கேட்டுலாமா நடிக்கிறாய் என்றார். அப்ப தான் சார் உள்வாங்கி பொங்குவதற்கு வசதியாய் இருக்கும் என்று நான் கூற, அவர் உள்வாங்கி பொங்குவதற்கு நீ என்ன கடலாடா என்று கலாய்த்ததோடு நீ நடிக்கிறதால படம் என்ன 2 நாள் எக்ஸ்ட்ராவா ஓடப்போகுதா என்றார். அன்றிலிருந்து கதை கேட்காமா கரன்சியை கேட்டோமா டேட்ட கொடுத்தமா என்று தான் சென்று கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.