நடிகர், டப்பிங் கலைஞர் ஆர்.வீரமணி கொரோனாவால் உயிரிழந்தார்!
தமிழ் சினிமா நடிகரும், டப்பிங் யூனியனின் முன்னாள் தலைவருமான ஆர்.வீரமணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கத்தில் நடிகர் ஆர்.வீரமணி, மனைவி நாகரத்தினம், மகள்கள் சண்முகப்பிரி்யா, பவித்ரா, கவிதா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலையில் ஆர்.வீரமணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ஆர்.வீரமணிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் ஆர்.வீரமணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
எம்.ஆர்.ராதாவின் நாடக குழுவில் இருந்த வீரமணியை எம்.ஆர்.ராதாவே சினிமாவுக்கு அழைத்து வந்தார். தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு, தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கலைஞராக ஆர்.வீரமணி இருந்து வந்தார். டப்பிங் யூனியன் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் வீரமணி இருந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக சினிமா உலகை விட்டு விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.