ஓட்டல்களில் ஜெய்பீம்? - நடிகர் சூர்யாவுக்கு வலுக்கும் கண்டனம்
ஜெய்பீம் படம் தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகர் சூர்யாவின், 'ஜெய்பீம்' திரைப்படம் தற்போது 'ஓடிடி'யில் வெளியாகி இருக்கிறது. இதை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெளியிடப் போவதாக, சூர்யா ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில், அவிநாசியில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு 12:30 மணி மற்றும் அதிகாலை 4:00 மணிக்கு படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது -
தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற திரையரங்கில் மட்டுமே திரைப்படம் வெளியிட வேண்டும். ஆனால், 'ஜெய்பீம்' படத்தை, பொது வெளியில், தாபா ஓட்டல்களில் திரையிட அவரது ரசிகர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நடிகர் சூர்யா, 'நீட்' மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். தொடர்ந்து, சட்டவிரோதமான செயல்களை தடுப்பதில் முனைப்பு கொண்டவராக தன்னை காட்டிக் கொள்கிறார். ஆனால், தன் ரசிகர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. 'ஓடிடி' படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி கிடையாது.
அவ்வாறு திரையிட்டாலும், அரசு அனுமதி பெற வேண்டும். இதை சூர்யா கண்டிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர், மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் தியேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும். நாங்கள் இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு புகார் அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.