சினிமாவின் சுதந்திரத்தை பறிக்கிறதா சட்ட வரைவு 2021 ? புதிய சட்ட வரைவு சொல்வது என்ன?
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-க்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கி விட்டன.
ஏன் இதற்கு இவ்வுளவு எதிர்ப்பு? அதில் என்ன உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
ஒரு திரைப்படம் வெளியாவது என்பது பிரசவம் என்பார்கள் திரையுலகினர். ஆம் நடிகர்கள் இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள் என குறைந்த பட்சம் 100 பேராவது இருப்பார்கள் .
அவர்களது ஜீவனே அப்போது தயாரிக்கும் திரைப்படம் தான் , குறிப்பாக திரைப்படங்களில் அரசியலில் இருக்கும்.
ஹாலிவுட படங்கள் தொடங்கி நமது கோலிவுட் வரை நாட்டில் நடக்கும் அரசியல் சம்பவங்களின் சாயல் திரைப்படங்களில் இருக்கும்
இந்த நிலையில் கடந்த சில வருடமாக இந்திய சினிமாவில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருகிறது.

ஒரு திரைப்படம் வெளியாகும் போது தனிப்பட்ட ஒருவர் அல்லது ஓர் இயக்கத்தின் வரலாறு, மதம் தொடர்பான நம்பிக்கைகளின் மீதான விமர்சனங்கள் போன்ற உணர்ச்சி மிக்க விஷயங்கள் குறித்துப் படங்கள் எடுக்கப்படும் போது அவை விவாத பொருளாகிறது அல்லது விவாத பொருளாக மாற்றப்படுவதும் அரங்கேறுகிறது.
இன்னம் சொல்லப்போனால் ஒரு படத்தின் ட்ரைலர் காட்சியினை வைத்தே படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிகரிப்பதை காணமுடிகிறது
என்ன சொல்கிறது புதிய சட்டம் :
இந்திய அரசின் புதிய சட்ட வரைவு 2021-ன் படி ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர்.
பொதுவாக ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும்.
பாதகம் என்ன:
அதாவது யு சான்றிதழ் பெற்ற படத்துக்கு ஏ சான்றிதழ் தர முடியும். தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
அந்த படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது.
மேலும் , சினிமா வரலாற்றில் அரசின் குறைகளை கூறுவது வழக்கமான ஒன்றுதான் அதனை இந்த புதிய சட்ட வரைவு தடை செய்கிறது,

அதாவது ஒரு படம் அரசுக்கு எதிராக அதன் தவறுகளை சுட்டிக் காட்டியோ அல்லது விமர்சித்தோ இருக்குமானால் அந்தபடம் வெளியாகாமல் தடுக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறுகிறது.
இதனால் தான் திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், அதாவது அவர்கள் கூறும் பிரதான கருத்து என்னவென்றால் இந்த புதிய சட்ட வரைவு படைப்பாளியின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கிறது.
தணிக்கைச் சான்றிதழ் பெற்ற ஹேராம், விஸ்வரூபம், பத்மாவதி போன்ற படங்கள் வெளியாகும் போது சில அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக திரையிட முடியாத சூழல் நிலவியது.
ஆகவே இந்த புதிய சட்டவரைவின்படி அரசு நினைத்தால் அப்படத்தை நேரடியாக தடை செய்ய முடியும் ஆகவே இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என கூறுகின்றனர்.
அதே சமயம் சில சாதகமான பலன்களும் இதில் உள்ளன அதனையும் காண்போம்,
சாதகங்கள் :
புதிய சட்டத்தின் படி சென்சார் சான்றிதழ்களை U/A 7+' U/A 13+' and 'U/A 16+' என 'U/A' சான்றிதழை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.
அதாவது இதற்கு முன்னர், மத்திய அரசு தன் புதிய டிஜிட்டல் கொள்கையில், ஓடிடி தளங்களுக்கு சென்சார் பிரித்தது போல திரைப்படங்களுக்கும் வரவிருக்கிறது.
மேலும் ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது. மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.'
அதே சமயம் ஒரு படத்தின் சென்சார் சான்றிதழ் 10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர், அதைப் புதுப்பிக்கவேண்டும்.

ஆனால் தற்போது கொண்டு வரப்பட்ட புதிய வரைவில் இது மாற்றப்பட்டு, சென்சார் சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதகமா சாதகமா புதிய சட்டம்:
இந்த புதிய சட்டம் பாதகமா அல்லது சாதகமா என்பது குறித்து மேலும் விபரங்களை பெற நமது ஐபிசி தமிழ் நாடு சினிமா விமர்சகர் பத்திரிக்கையாளர் பரத் அவர்களை அணுகினோம்.
அவர் கருத்தின் படி புதிய சட்டவரைவில் சில திருத்தங்கள் வரவேற்க கூடியதுதான். ஆனால் சென்சார் முழுவதும் நேரடியாக மத்திய அரசிற்கு செல்லக் கூடாது அதற்கென தனி அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் .
அதில் திரைத்துறை சம்மந்தப்பட்டவர்களே இருக்க வேண்டும் என கூறினார்.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் சுதந்திரமும் கருத்தும் விரிவடையும் அப்போது சட்டங்கள் அதனை நெறிபடுத்த வேண்டுமே ஒழிய மழுங்கடிக்கக் கூடாது என்பதுதான் அனைவரது விருப்பமே.
(தகவல்கள் : விகடன் , இந்தியா டூ டே , தி இந்து ஆங்கிலம்)